என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, December 10, 2010

16 அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி (பாகம்-9)

ஜனதா கட்சியில் நெருக்கடி அதிகமாகிக் கொண்டே இருந்தது. மொரார்ஜி தேசாயை கவிழ்த்துவிட்டு பிரதமராக வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த சரண்சிங், "இதுதான் சமயம்" என்று, ஜனதா கட்சியை உடைப்பதில் ஈடுபட்டார். "மொரார்ஜி தேசாய் பதவி விலக வேண்டும்" என்று, சரண்சிங் கோஷ்டி போர்க்கொடி தூக்கியது. "நான் ஏன் ராஜினாமா செய்யவேண்டும்?" என்று திருப்பிக் கேட்ட தேசாய், "எக்காரணம் கொண்டும் நான் ராஜினாமா செய்யமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மொரார்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்நாயக், பகுகுணா, ஜார்ஜ்பெர்னாண்டஸ் உள்பட 13 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். 80 "எம்.பி"க்கள் ஜனதாவை விட்டு விலகி, ராஜ்நாராயணன் கட்சியில் சேர்ந்தார்கள்.

இந்நிலையில், மொரார்ஜி தேசாய்க்கு மெஜாரிட்டி இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட காங்கிரஸ், அவர் மந்திரிசபை மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. "எனக்கு இன்னமும் மெஜாரிட்டி ஆதரவு இருக்கிறது. பாராளுமன்றத்தில் என் மெஜாரிட்டியை நிரூபித்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் தோற்கடிப்பேன்" என்று மொரார்ஜி கூறினார். 1979 ஜுலை 15_ந்தேதி, டெல்லி அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவி மீது நீண்ட காலமாகவே "கண்" வைத்திருந்த துணைப்பிரதமர் ஜெகஜீவன்ராம், மொரார்ஜி தேசாயை சந்தித்தார். "ஜனதா கட்சியில் பெரும்பான்மையோர், நீங்கள் பிரதமராக நீடிப்பதை எதிர்க்கிறார்கள்.

கட்சி துண்டு துண்டாக உடைந்து சிதறி விடும்போல் இருக்கிறது. சரண்சிங், மற்ற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பிரதமராக ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். இதைத்தடுக்க வேண்டுமானால், பிரதமர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்யவேண்டும். வேறு வழி இல்லை" என்று கூறினார். "ராஜினாமா செய்ய நீங்கள் மறுத்தால், நான் ராஜினாமா செய்து விட்டு வெளியேறுவேன்" என்று எச்சரித்தார். இதன் பிறகு, மூத்த மந்திரிகளுடனும் ஜனதா தலைவர் சந்திரசேகருடனும் மொரார்ஜி தேசாய் ஆலோசனை நடத்தினார். பதவியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தார். ராஜினாமா அன்று மாலை ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று, ஜனாதிபதி சஞ்சீவரெட்டியை சந்தித்தார்.

"பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று கூறிவிட்டு, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். "புது மந்திரிசபை அமைக்கப்படும் வரை, காபந்து அரசாக பதவியில் இருங்கள்" என்று மொரார்ஜியிடம் சஞ்சீவரெட்டி கேட்டுக்கொண்டார். காங்கிரசை தோற்கடித்து விட்டு, 1977 மார்ச் 24_ந்தேதி பிரதமராகப் பதவி ஏற்ற தேசாய், 2 வருடம் 5 மாதங்களில் பதவியை விட்டு விலகினார். புது மந்திரிசபை அமைக்க பலர் போட்டியிட்டனர். ஜனதாவை விட்டு விலகி புதுக்கட்சி தொடங்கிய ராஜ்நாராயணன், ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். "என் கட்சியில் 75 எம்.பி.க்கள் உள்ளனர். புது மந்திரிசபை அமைக்கத் தேவையான பலத்தை விரைவில் திரட்ட முடியும். எனவே, மந்திரிசபை அமைக்க என்னை அழையுங்கள்!" என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனதா கட்சியின் ஒரு அங்கமாக, ஜனசங்கம் இருந்தது. ஜனசங்கத்தின் தொடர்பை துண்டித்துக்கொண்டால், மொரார்ஜி தேசாயை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், "வாழ்ந்தாலும் சரி; அழிந்தாலும் சரி. தேசாயுடன்தான் இருப்போம்" என்று ஜனசங்கம் அறிவித்தது. இதற்கிடையே சரண்சிங், ஜனதாவை விட்டு விலகி, ராஜ் நாராயணன் கட்சியில் சேர்ந்தார். அவரை பிரதமராக்க அவருடைய ஆதரவாளர்கள் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். "சரண்சிங் மந்திரிசபைக்கு ஆதரவு கொடுக்கிறோம்" என்று காங்கிரஸ் திடீரென்று அறிவித்து, அனைவரையும் திகைக்க வைத்தது. ஜனாதிபதி சஞ்சீவரெட்டியை சரண்சிங் சந்தித்தார். 262 எம்.பி.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவித்து, அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். தன் மந்திரிசபையில் இடம் பெறுமாறு காங்கிரசையும் சரண்சிங் அழைத்தார்.

28_7_1979 அன்று சரண்சிங் பிரதமராகவும், காங்கிரசை சேர்ந்த சவான் துணைப்பிரதமராகவும் மற்றும் 7 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றார்கள். இரண்டு நாட்கள் கழித்து, சி.சுப்பிரமணியம் உள்பட 17 பேர் மந்திரியானார்கள். இந்த மந்திரிசபையில் அ.தி.மு.க.வும் இடம் பெறவேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த சத்தியவாணிமுத்து, பாலாபழனூர் ஆகியோர் 19_8_1979_ல் மந்திரிகளாகப் பதவி ஏற்றனர்.

இந்திரா காந்தியின் தாத்தா மோதிலால் நேரு, அலகாபாத்தில் பெரிய கோடீஸ்வரராக வாழ்ந்தவர். பெரிய வழக்கறிஞர். அலகாபாத்தில், மோதிலால் நேருவுக்குச் சொந்தமான இந்த மாளிகையின் பெயர் "சுயராஜ்பவன்". 42 அறைகளைக் கொண்டது. இங்குதான் 1917 நவம்பர் 19_ந்தேதி இந்திரா பிறந்தார். 1930_ம் ஆண்டு, "ஆனந்த பவனம்" என்ற இன்னொரு மாளிகையை மோதிலால் கட்டினார். இது, சுயராஜ்பவனைவிட சற்று சிறியது என்றாலும், நவீன வசதிகள் கொண்டது.

1930 முதல் இந்த மாளிகையில்தான் நேரு குடும்பம் வசித்தது. இங்குதான் இந்திரா _ பெரோஸ்காந்தி திருமணம் நடந்தது. இந்த வீடுகளையெல்லாம் நாட்டுக்காக அர்ப்பணித்து விட்டார், நேரு. அதன் காரணமாக, இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இல்லாதபோது, வாடகை வீட்டுக்கு செல்ல நேரிட்டது.
 ====================================================
புது மந்திரிசபை அமைக்க சரண்சிங்கை ஜனாதிபதி அழைத்தபோது, "உங்களுக்கு மெஜாரிட்டி பலம் இருப்பதை, ஆகஸ்டு மூன்றாவது வாரத்தில் நீங்கள் பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதன்படி மெஜாரிட்டியை நிரூபிப்பதாக, சரண்சிங் ஒப்புக்கொண்டிருந்தார். காங்கிரஸ் ஆதரவுடன் மெஜாரிட்டி பலத்தை நிரூபித்துவிட முடியும் என்று அவர் நம்பினார். இந்நிலையில், சரண்சிங்கை தொடர்ந்து ஆதரிக்க இந்திரா காந்தி ஒரு நிபந்தனை விதித்தார்.

நெருக்கடி நிலையின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை மொரார்ஜி தேசாய் நிறைவேற்றியிருந்தார். அந்த சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும், அப்படி வாபஸ் பெற்றால் தொடர்ந்து ஆதரவு தருவதாகவும் சரண்சிங்கிடம் இந்திரா காந்தி தெரிவித்தார். ஆனால், அந்த சட்டத்தை வாபஸ் பெற சரண்சிங் மறுத்துவிட்டார். "அப்படியானால் உங்களுக்கு இனி ஆதரவு இல்லை" என்று இந்திரா காந்தி அறிவித்தார். "காங்கிரஸ் கட்சி என் முதுகில் குத்திவிட்டது" என்று கூறிவிட்டு, சரண்சிங் 20_ந்தேதி காலை ஜனாதிபதியை சந்தித்து, தன் மந்திரி சபையின் ராஜினாமாவைக் கொடுத்தார்.

பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தும்படி கேட்டுக் கொண்டார். 24 நாட்கள் பிரதமராக இருந்த சரண்சிங், ஒரு நாள்கூட பாராளுமன்றத்தைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரிசபை ராஜினாமா பற்றி சரண்சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:_ "நெருக்கடி கால கொடுமைகளுக்கு காரணமான இந்திரா, அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தினார். அப்போதுதான், என் தலைமையிலான மந்திரிசபைக்கு ஆதரவு தரமுடியும் என்று நிபந்தனை விதித்தார்.

குறிப்பாக, நெருக்கடி நிலையை கண்டித்து எடுக்கப்பட்ட ஒரு சினிமா படத்தை எரித்ததாக, சஞ்சய் காந்தி, வி.சி.சுக்லா ஆகியோர் மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதற்கு மத்திய அரசு இணங்கினால், அது நீதித்துறையில் குறுக்கிடுவது ஆகும். எனவே, இந்திராவின் கோரிக்கையை நிராகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்திராவின் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் மீதும் தொடரப்பட்ட நெருக்கடிக்கான வழக்குகளை ரத்து செய்து விட்டு பதவியில் நீடிக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை." இவ்வாறு சரண்சிங் கூறியிருந்தார்.

இதற்கிடையே ஜனாதிபதியை ஜெகஜீவன்ராம் சந்தித்தார். புது மந்திரிசபை அமைக்க தன்னை அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த "எம்.பி"க்கள், ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். "ஜெகஜீவன்ராமை பிரதமராக்க வேண்டும்" என்று மனு கொடுத்தார்கள். "ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்காமல் இருந்தால், ஜெகஜீவன்ராமை ஆதரிக்கத் தயார்" என்று காங்கிரஸ் அறிவித்தது. இதற்கிடையே, சட்டமந்திரி கத்தர், ஜனாதிபதியை சந்தித்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார். "பாராளுமன்றத்தைக் கலைக்க, பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 295 எம்.பி.க்கள் விரும்புகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது. பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தேர்தல் நடந்து முடியும் வரை அனைத்துக்கட்சிகளையும் கொண்ட "தேசிய அரசாங்கம்" அமைக்கலாமா என்று, சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார்.

"தேசீய அரசாங்கம்" அமைக்க இ.காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் ஜனதா எதிர்த்தது. பாராளுமன்றம் கலைப்பு முடிவில், பாராளுமன்றத்தை கலைப்பது என்றும், தேர்தல் நடந்து முடியும்வரை சரண்சிங் மந்திரிசபையை "காபந்து மந்திரிசபை"யாக நீடிக்க அனுமதிப்பது என்றும் ஜனாதிபதி தீர்மானித்தார். இதற்கான உத்தரவு 22_8_1979 அன்று பிறப்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு இருந்ததாவது:_ பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படுகிறது. நவம்பர் மாதம் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறும். டிசம்பர் 15_ந்தேதிக்குள் புதிய மந்திரிசபை பதவி ஏற்கும். தேர்தல் முடியும் வரை தற்போதுள்ள சரண்சிங் மந்திரிசபை "காபந்து" மந்திரிசபையாக நீடிக்கும். ஆனால், முக்கியமான கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக்கூடாது." இவ்வாறு ஜனாதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

சரண்சிங் வாழ்க்கைப்பாதை நீண்ட காலம் உத்தரபிரதேச அரசியலில் பங்கு கொண்டிருந்தவர் சரண்சிங். இவர் 1977_ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு, முதல் முறையாக மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றார். சிறந்த நிர்வாகியான இவர், விவசாய துறையில் மிகவும் அக்கறை கொண்டவர். சரண்சிங் 1902_ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தார். "எம்.ஏ" பட்டம் பெற்றவர். சட்ட கல்லூரியில் படித்து வக்கீல் ஆனார். 1929_ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 8 ஆண்டு கால தீவிர அரசியலுக்குப்பின் 1937_ம் ஆண்டு மாநில சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் குதித்து சிறை சென்றார். 1946_ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கோவிந்த வல்லபபந்த் மந்திரிசபையில் துணை மந்திரி ஆனார். 5 ஆண்டுகள் கழித்து மாநில நிதி, தகவல் மந்திரியாக பதவி ஏற்றார். தொடர்ந்து 15 ஆண்டுகள் மந்திரியாக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2 முறை உத்தரபிரதேச முதல்_மந்திரியாக இருந்தார். 1969_ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தனியாக "பாரதீய கிரந்தி தளம்" என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்டார்.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாரதீய கிரந்தி தளமும், வேறு சில கட்சிகளும் சேர்ந்து "பாரதீய லோக் தளம்" என்ற கட்சியை அமைத்தன. ஜனதா கட்சி உருவானபோது பாரதீய லோக் தளமும், அதில் இணைந்தது. அதன் பிறகு ஜனதாவின் துணைத்தலைவராக சரண்சிங் இருந்தார். பாரதீய கிரந்தி தளத்தின் "ஏர் உழவன்" சின்னம்தான், 1977_ல் நடந்த பொதுத்தேர்தலில் ஜனதா கட்சியின் சின்னமாக இருந்தது. 1977_ல் மார்ச் மாதம் 24_ந்தேதி தேசாய் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் உள்நாட்டு இலாகா மந்திரியாக சரண்சிங் பதவி ஏற்றார். 1978_ம் ஆண்டு ஜுன் 29_ந்தேதி சரண்சிங்கையும், அவரது பிரதம சீடர் ராஜ்நாராயணனையும், மத்திய மந்திரிசபையில் இருந்து ராஜினாமா செய்யும்படி மொரார்ஜி தேசாய் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் ராஜினாமா செய்தனர். பிறகு தேசாய்க்கும், சரண்சிங்கிற்கும் சமாதானம் செய்து வைக்க பல முறை முயற்சி நடந்தது. அதில் வெற்றி கிடைக்கவில்லை. 1979 ஜனவரி மாதம் 10_ந்தேதி மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடந்து வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ஜனவரி 24_ந்தேதி சரண்சிங் துணைப்பிரதமராக பதவி ஏற்றார். தேசாய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பிரதமர் ஆனார்
தொடரும்
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3, 4, 5,6, 7 8

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன். தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம்.
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....

Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. நல்ல தகவல்கள்! வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 2. 1930 முதல் இந்த மாளிகையில்தான் நேரு குடும்பம் வசித்தது. இங்குதான் இந்திரா _ பெரோஸ்காந்தி திருமணம் நடந்தது. இந்த வீடுகளையெல்லாம் நாட்டுக்காக அர்ப்பணித்து விட்டார், நேரு. அதன் காரணமாக, இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இல்லாதபோது, வாடகை வீட்டுக்கு செல்ல நேரிட்டது.//

  நம்ம முதல்வரும் வீட்ட கொடுத்துட்டாரே..அப்ப ஸ்டாலின் முதலமைச்சராகும் போது..வாடகைவீடு தானா #அப்பாவி தமிழன்.

  ReplyDelete
 3. //என் கட்சியில் 75 எம்.பி.க்கள் உள்ளனர். புது மந்திரிசபை அமைக்கத் தேவையான பலத்தை விரைவில் திரட்ட முடியும். எனவே, மந்திரிசபை அமைக்க என்னை அழையுங்கள்!" என்று அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.//
  இதுமாதிரி பல காமெடிகள் நடந்து இருக்கு போல! இண்ட்ரஸ்டிங்...

  ReplyDelete
 4. படிக்க படிக்க சுவாரசியம் குறையவில்லை......பயனுள்ள தொகுப்பு......

  ReplyDelete
 5. வந்தேன் ஐயா தொடரட்டும்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

  ReplyDelete
 6. சுவாரஸ்யமான தொகுப்பு.தொடரட்டும்

  ReplyDelete
 7. சிறப்பான தகவல்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள் அருமைதொடருங்கள்....பகிர்வுக்கு நன்றிதொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 8. உண்மையாகவே நல்ல முயற்சி தொடரட்டும் உங்கள் கட்டுரை...

  ReplyDelete
 9. சுவாரஸ்யமாகவுள்ளது

  ReplyDelete
 10. வணக்கம் நண்பரே . பாராட்டுகள் தங்களின் பணி பாராட்டுகளுக்குரியது.அழகாக இந்த தலைமுறை மறந்து விட்ட அனால் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் . உங்களின் இந்த தொகுப்பு பயனுள்ளது .என்றும் அன்புடன் ...போளூர் தயாநிதி

  ReplyDelete
 11. வணக்கம் நண்பரே . பாராட்டுகள் தங்களின் பணி பாராட்டுகளுக்குரியது.அழகாக இந்த தலைமுறை மறந்து விட்ட அனால் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் . உங்களின் இந்த தொகுப்பு பயனுள்ளது .என்றும் அன்புடன் ...போளூர் தயாநிதி

  ReplyDelete
 12. தொடர்ந்து கலக்குங்க ஜி...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.