என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, September 22, 2011

6 ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் வாரிசான வரலாறு- நேற்றைய தொடர்ச்சி.....


உண்மையில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தபோது பெயருக்குத்தான்  நிழல் முதல்வராக நெடுஞ்செழியன் இருந்தார் மற்றபடி, சகலமும் ஆர்.எம். வீரப்பன் வசமே இருந்தன. சகலமும் என்றால் கட்சி நிர்வாகம் தொடங்கி ஆட்சி, தேர்தல், கூட்டணி, வேட்பாளர்கள், நிதி, பிரசாரம் அனைத்துமே அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பிரச்சாரத்துக்கு யாரை, எங்கே அனுப்பலாம் என்பதை ஆர்.எம்.வீதான் முடிவு செய்தார்.

அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சினிமா காலத்தில் இருந்தே அவர்கள் இருவருக்குமே ஒத்துவராது. அரசியலிலும் அது நீடித்துக் கொண்டிருந்தது.ஏற்கனவே ஒரு முறை பிரசாரத்திற்கு ஆர்.எம்.வீ., போகாததால் கட்சியின் கொ.ப.செ., என்ற முறையில் அவருக்கே நோட்டீஸ் அனுப்பியிருந்தார் ஜெ. அதன்பிறகு ஆர்.எம்.வீ-க்கு ஜெயா மேலிருந்த கடுப்பு இன்னும் அதிகரித்தது

எம்.ஜி.ஆரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சிக்குள் ஜெயா  அதிகாரம் செலுத்துவதில் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலருக்கும் விருப்பம் இல்லை. பலத்த அதிருப்தியில் இருந்தனர்.

தங்களுடைய அதிருப்தியை எம்.ஜி.ஆரிடம் நேரடியாகச் சொல்லமுடியவில்லை. தவித்தனர். தகுந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர். தற்போது கிடைத்துவிட்டது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவைத் தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பக்கூடாது. உமியளவு வாய்ப்பு கிடைத்தாலும் அதைக்கொண்டு உச்சத்துக்குப் பறந்துவிடக்கூடியவர் ஜெயலலிதா. அதற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. ஓரங்கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். அதன் எதிரொலியே ஜெயலலிதா பிரசாரம் செய்யமாட்டார் என்கிற அந்தப் பத்திரிகை செய்தியாக வெளிப்பட்டது.

தன்னை வலுக்கட்டாயமாக அமுக்கப்பார்க்கிறார்கள்  என்றதும் திமிறிக்கொண்டு எழுந்துவிட்டார் ஜெ. 3 டிசம்பர் 1984 அன்று ஆண்டிப்பட்டியில் தொடங்கியது ஜெயலலிதாவின் பிரசாரம். அடுத்தடுத்து நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம் என்று மொத்தம் இருபத்தியோரு நாள்களுக்குப் பிரசாரம் செய்தார். மக்களிடம் நேரடியாக உரையாடினார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த திமுகவின் தவறான பிரசாரம் பற்றிப் பேசினார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டார். உண்மையிலேயே சூறாவளிச் சுற்றுப்பயணம் அது.

எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்யாத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டியதாகப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அபார வெற்றி.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு 132 தொகுதிகள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில் தான் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்- 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க-12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது.


இந்த வெற்றிக்கு சில காரணங்கள் இருந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிட்சையில் இருக்கும்போது அவர் நடப்பாதையும், கைகாட்டுவதையும், சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி, அதை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மூலம் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர் அதிமுக., தலைவர்கள். கூடவே சமீபத்தில் படுகொலையான இந்திரா காந்தியின் இறுதி ஊர்வல காட்சிகளும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டது.  ராஜீவ்காந்தியையும் எம்.ஜி.ஆரையும் குறிக்கும் விதமாக தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற பிரச்சார கோசங்கள் முதன்மை பெற்றன.

தன்னைச் சுற்றிப் பலமான எதிர்ப்புவலை பின்னப்படுகிறது என்று தெரிந்ததும் ஆவேசப்பட்டு எழுந்து, பிரசாரம் செய்து, அந்த வலையை அறுத்தெறிந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவாலும், அதிமுக தொண்டர்களாலும் மறக்கமுடியாத பிரசாரம் அது. கொண்டாடி தீர்த்தனர் ஜெ ஆதரவாளர்கள். ஆம் அ.தி.மு.க., வில் அப்போது ஜெயலலிதாவிற்கென்று  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் என்று ஒரு கோஷ்டி உருவாகியிருந்தது.

சிகிட்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இரண்டு  வருடங்கள் கழித்து மீண்டும் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிட்சைக்காக அமெரிக்கா சென்றார்.அந்த நேரத்தில், எம்.ஜி.ஆர், தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும், இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும், அதனால் என்னை முதல்வராக்க்குங்கள் என்றும் பிரதமர் ராஜீவிற்கு தன் கைப்படவே ஒரு கடிதம் எழுதி அதை சேலம் கண்ணன் மூலம் ஜெயலலிதா கொடுத்து விட்டதாக மக்கள் குரல் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. இது போதாதா ஜெயின் அரசியல் எதிரிகளுக்கு....எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அந்த விஷயத்தை பக்குவமாக அவரின் காதிற்கு கொண்டுசென்றனர் அவரின் அரசியல் எதிரிகள்.

இதைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் எம்.ஜி.ஆர். உடனே, இனி ஜெயலலிதாவிடம் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டார். தொடர்ந்து அவரை கட்சியிலிருந்தும் நீக்குவது என்பது அவரின் திட்டம்.

அதன்பிறகு ஒரு நாள் ஜெயாவை கட்சிலிருந்து நீக்க முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்,. அப்போது அங்கிருந்த அமைச்சர் ராஜாராம் இப்போது நீக்கினால் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுவிடும். உங்களுக்கு பூர்ண குணமானபின் இந்த முடிவை எடுக்கலாம் என்று அவரின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டார். அவரின் ஆலோசனை படியே ஜெ.,யை நீக்கும் முடிவு தற்காலிகமாய் தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த மூன்றாம் நாள் எம்.ஜி.ஆர். மரணமடைந்து விட்டார்.

இறுதிவரை எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த ஜெ எல்லோராலும் கவனிக்கப்பட்டார். . எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வ்லுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட  சம்பவமும் அப்போது  நடந்தது.அதனால் அனுதாபமும் பெற்றார்.


எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து அரசு நிர்வாகத்தை கவனிக்க நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். 

பொருத்திருங்கள்.....

 நேற்று படிக்காதவர்களுக்காக.....

ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் வாரிசான வரலாறு......Post Comment

இதையும் படிக்கலாமே:


6 comments:

 1. ம்ம் ..
  வரலாறு சுவாரசியம் தான்!!

  ReplyDelete
 2. சுவாரசியமாக இருக்கிறது. ஜெயலலிதாவை தள்ளி விட்டது, எம்‌ஜி‌ஆர்ரின் அண்ணன் மகன் என்று சொல்கிறார்களே? முதல் மரியாதை படத்தில் புல்லாங்குழலோடு வருவாரே...

  ReplyDelete
 3. புக்மார்க் செய்ய வேண்டிய சரித்திர நிகழ்வு. மேலும் தொடருங்கள்.

  ReplyDelete
 4. கால சந்தர்ப்பத்தின் வரலாற்று பதிவு.மீண்டும் பதிவின் மூலம் அறிய வாய்ப்பு.நன்றி.

  ReplyDelete
 5. கலக்கலா கொண்டுபோறீங்க கஸாலி..

  எனக்குத் தெரியும் உங்களால தான் இதை சிறப்பா எழுத முடியும்னு!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.