என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, September 23, 2011

14 ஜெயலலிதா, அண்ணா தி.மு.க.,வின் பொதுச்செயலாளரான வரலாறு...... இறுதி பாகம்


தானே முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நெடுஞ்செழியன் அறிவித்தாலும், அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதலமைச்சராக்காப்போவதாக அவர் அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.


நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ரூட்டி ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்( சாத்தூரார்), அரங்கநாயகம் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அண்ணா.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக ஜெயாவை தேர்ந்தெடுத்தனர். இதை ஜானகி, ஆர்.எம்.வீ., போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் 98 பேர்கள் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர்கள் ஜெயாவிற்க்கு ஆதரவாகவும் இருந்தனர். ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறிவிடக்கூடாதென்று ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.


ஜெ ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 29 பேரும் வட மாநிலத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு ஆம்னிவேனில் ஊர் சுற்றிக்காட்டப்பட்ட  கூத்தும் நடந்தது. ஜெ ஆதரவாளர்கள் திருநாவுக்கரசுவும், சாத்தூர் ராமச்சந்திரனும் அந்த வேலையை பார்த்துக்கொண்டனர்.

பின் ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை கவர்னர் குரான முன் நிறுத்தி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார் ஆர்.எம்.வீ.,.அதன் படியே ஜானகியை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர் குரானா.3 வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறும் கட்டளையிட்டார். 1988 ஜனவரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஜானகி. இரு அணிகளில் ஜானகிக்கு ஆதரவு அதிகமிருந்தாலும் ஜெயலலிதா வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மைனாரிட்டி ஜானகி அரசாகவே அது இருந்தது. 3 வாரத்திற்குள் வேறு மெஜாரிட்டியை  நிரூபித்தாக வேண்டுமே.....


62 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் ஆதரித்தால் போதும்...ஆட்சி பிழைத்துக்கொள்ளும் என்று முடிவு செய்த ஆர்.எம்.வீ., நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ராஜீவ் காந்திக்கு தூது விட்டார். ஆனால், பிளவு பட்ட அதிமுக., வை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறி விட்டார் ராஜீவ் இதற்கிடையில் ஜெயலலிதாவும் டெல்லி சென்று ராஜீவிடம் ஆதரவை கோரினார். ஜெயலலிதாவிடமும் அதே பதிலை சொன்னவர். சட்டசபையில் ஜானகியை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் அறிவித்தார்.

வேறுவழியின்றி தி.மு.க.,வின் 20 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஆர்.எம்.வீ, ராசாராம், மாதவன் போன்றோர் இறங்கினர். அ.தி.மு.க.,வின் எந்த பிரிவையும் ஆதரிக்கப்போவதில்லை என்று தி.மு.க., செயற்குழுவில் தீர்மாணிக்கப்பட்டுவிட்டதால் ஆதரவு தரமுடியாது என்று கை விரித்து விட்டார் கலைஞர்( அப்படி சொன்னது எத்தனை பெரிய தவறென்று இப்போது உணர்ந்திருப்பார் கலைஞர். அவர் மட்டும் அன்று ஜானகிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் 98+20=118 என்ற எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில் ஜானகி அரசு காப்பாற்றப்பட்டிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயாவும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்).


ஜனவரி 28 அன்று சட்டமன்றம் கூடியதும் ஜானகி-ஜெயா அணிகளுக்கிடையே பெரும் கலவரம் வெடித்தது. மைக், ஒலிபெருக்கிகள் உடைக்கப்பட்டன. பல எம்.எல்.ஏ.,க்களின் மண்டை உடைந்து ரத்தம் ஓடியது. கட்சி மாறி வாக்களித்ததால்...கட்சி கட்டுப்பாட்டை மீறிய   33 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். ஜானகி கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் அறிவித்தார்.

ஆனால், சட்டஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக கூறி ஜானகி ஆட்சி வெறும் 24 நாட்களில் கலைக்கப்பட்டது பரிதாபமான க்ளைமேக்ஸ்.

அதன் பின் ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமலில் இருந்தது.

இதற்கிடையில் ஜெயலலிதா அணியில் குழப்பம் ஏற்பட்டது. ஜெயா அணியில் செயல்பட்ட நாவலர், திருநாவுக்கரசு, பண்ரூட்டி, அரங்கனாயகம் போன்ற தலைவர்கள்(?) ஜெ.,க்கு எதிராக திரும்பினர். கட்சிக்கு வசூல் செய்யப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஜெயாவிடம் கணக்கு கேட்ட இவர்கள் கட்சியிலிருந்து இல்லை...இல்லை...ஜெ அணியிலிருந்து நீக்கப்பட்டனர். தங்களை நீக்க ஜெ.,க்கு அதிகாரமில்லை என்று கூறிய இவர்கள், நால்வர் அணி என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தனர்.


அப்போதுதான் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட நடமாடும் பல்கலைக்கழகமான நாவலரை உதிர்ந்த மயிர் என்ற உலகப்புகழ் பெற்ற வார்த்தையால் வசை படினார் ஜெ.,

நால்வர் அணி சிறிது காலத்துக்குள்ளாகவே மீண்டும் ஜெயாவுடன் இணைந்தது.

1989 ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு... ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதாவிற்க்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜானகியுடன் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதாவுடன் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி அமைத்தனர். தி.மு.க., பலமான கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் ஜெயித்தால் மூப்பனார் முதல்வர் என்ற கோஷத்துடன் தனித்து போட்டியிட்டது.

இந்த தேர்தல் முடிவில்...தி.மு.க., மீண்டும் அதாவது 13 வருட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதே நேரம் 198 இட்ங்களில் போட்டியிட்ட ஜெ., அணிக்கு 27 இடங்களும், 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணிக்கு 1 இடமும் கிடைத்தது.  (நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தான் அந்த ஒருவர்).

ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகியம்மாள் 22,647 வாக்குகள் பெற்று  தி.மு.க., வேட்பாளர் ஆசையனிடம் தோல்வியை தழுவி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 33,191 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அங்கு ஜெயாவை எதிர்த்து போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளர்  நடிகை வென்னிற ஆடை நிர்மலா வெறும் 1512 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்திருந்தார்.


இதில் ஜானகி அணிக்கு மொத்தம் 21,78,071 (9%) வாக்குகளும், ஜெயலலிதா அணிக்கு மொத்தம்  50,54,138 (21%) வாக்குகளும் கிடைத்திருந்தது.
இந்த தேர்த்ல் தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகி, தனது பிரிவை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கினார். அதன் பிறகே ஒருங்கிணைந்த அண்ணா.தி.மு.க., வின் பொது செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயாவிற்கு கிடைத்தது. அரசியல் வானில் எம்.ஜி.ஆரின் வாரிசாகவும் பிரகாசித்தார்.

இந்த பதிவைப்பற்றிய சில விளக்கங்கள்:
நண்பர் செங்கோவியிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வந்ததும்  இதற்கான பதிலில் ஒரு முப்பது சதவீதம்  என் நினைவில் இருந்தது. அந்த  30% பதில்களே இதற்கு போதும்தான். ஆனாலும், மேலோட்டமாக சொல்வதைவிட இன்னும் கொஞ்சம் ஆழமாக சொன்னால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன்பிறகே ஒரு தீவிர தேடலில் இறங்கினேன்.இனையத்தில்  ஜெயா பற்றிய தகவல்களும்,சம்பவங்களும் கொட்டிக்கிடந்தது. சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்புதானே வரலாறு. அந்த பொக்கிஷங்களை எடுத்து என் நினைவில் இருந்த விஷயங்களையும் ஆங்காங்கே சேர்த்து என் பாணியில் நேர்த்தியாக தொகுத்தளித்தேன். அவ்வளவே என் பணி.ஆம்... நான் இந்த கட்டுரையின் தொகுப்பாளர் மட்டுமே. இந்த தேடலின் மூலம் எனக்கு தெரியாத விஷயங்கள் நிறையவே தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு கேள்வியை கொடுத்த நண்பர் செங்கோவிக்கு நன்றி.....


இன்னொரு முக்கியமான விஷயம்....இதில் சசிகலா பற்றி ஒன்றுமே இல்லையே என்று கேட்பவர்களுக்கு....ஜெயலலிதா அண்ணா தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் ஆன வரலாறுதான் நமக்கு முக்கியமே தவிர...ஜெயின் வரலாறு அல்ல....என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 


படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக முந்தைய பாகங்கள்.....

ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் வாரிசான வரலாறு......-1

Post Comment

இதையும் படிக்கலாமே:


14 comments:

 1. அருமையான தொகுப்பு அண்ணே

  ReplyDelete
 2. அன்பின் ரஹீம் கஸாலி - வரலாறு - அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. நன்று - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

  ReplyDelete
 4. ஒரு நீண்ட அரசியல் நிகழ்வை தொகுத்து... மிக சிறந்த பதிவாக வெளியிட்டதில் வெறும் பதிவாக இல்லாமல் ஒரு வரலாறாக உருமாறிவிட்டது. அடுத்து இது மாதிரி இன்னொரு தொகுப்பை கையில் எடுங்கள்... வாழ்த்துகள்

  ReplyDelete
 5. திராவிட இயக்கங்களின் வரலாறு எழுதுங்கன்னு சொன்னேன்...நீங்க கேட்கலை. அதான் இப்படி பிச்சு, ஜெ.பத்தி மட்டும் கேட்டேன்..அடுத்த கேள்வியை சீக்கிரமே அனுப்புறேன்..இந்த கேள்வி/பதில்களை மொத்தமா தொகுத்தா, அது தான் திராவிட இயக்க வரலாறு

  உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட் கஸாலி.

  ReplyDelete
 6. கலைஞர் மட்டும் அன்று ஜானகிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் 98+20=118 என்ற எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில் ஜானகி அரசு காப்பாற்றப்பட்டிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயாவும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்.

  -ஆக அம்மாவின் வளர்ச்சியில் கலைஞரின் பங்கும் இருந்திருக்கிறது. புதிய தகவல். அருமையான தொகுப்பு. உங்களின் உழைப்புக்கு ஒரு சல்யூட்!

  ReplyDelete
 7. அருமையான தொகுப்பு நண்பா.... நன்றி!

  ReplyDelete
 8. அண்ணே வணக்கம், நான் பொதுவாக பின்னுட்டமிடுவதில்லை. சோம்பேறித்தனம்தான் காரணம். ஆனால் இந்தப்பதிவும் அதற்கான உழைப்பும் என்னை கண்டிப்பாக பின்னுட்டமிட உந்தித்தள்ளியது. உங்கள் உழைப்புக்கும் ஞாபகசக்திக்கும் தலைவணங்குகிறேன்.

  ReplyDelete
 9. இதற்கான தகவல்களை திரட்டும் விஷயம் சாதாரணமானதல்ல.

  ReplyDelete
 10. புருவங்களை உயரவைத்த பல சம்பவங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது....அற்புதமாகத் தொகுத்துள்ளீர்கள்...நன்றி!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.