என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, March 22, 2012

13 சங்கரன்கோவிலில் உண்மையாக ஜெயித்தது யார்? ஒருபரபர அலசல்.....
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி ஜெயித்தாலும், எதிர்கட்சி தோற்றாலும் நாட்டிலோ ஆட்சியிலோ எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை என்ற ஆதங்கத்தோடு நடந்து முடிந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஆளும் அண்ணா.தி.மு.க.,மாபெரும் வெற்றிபெற்று தொகுதியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தப்பிறகு சந்திக்கும் இரண்டாவது இடைத்தேர்தல் இது. இதற்கு முன் திருச்சியில் நடந்த இடைத்தேர்தலிலும் ஆளுங்கட்சியே வெற்றிபெற்றது.

அப்போதெல்லாம் இடைத்தேர்தல் என்றாலே பரபரப்பில்லாமல், ஒரு ஊராட்சி மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தலைப் போல்தான் நடைபெற்று வந்துள்ளது. 1989-1990 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மருங்காபுரி இடைத்தேர்தலில் அண்ணா.தி.மு.க. வே வெற்றிபெற்றது. அதைப்போல் 1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் ராஜினாமா செய்தார்.அப்போது நடந்த துறைமுகத்திற்கான இடைத்தேர்தலில் தி.மு.க.,வேட்பாளர் செல்வராஜே வெற்றிபெற்றார்.(பின் செல்வராஜ் ம.தி.மு.க.,விற்கு மாறியது தனிக்கதை).

அதன்பின் நடந்த சில பல இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றிபெற்று வருவது தொடர்கதையாக ஆனாலும், இப்போதுள்ள பரபரப்பெல்லாம் அப்போது கிடையாது.
இடைத்தேர்தல் என்றாலே பரபரப்பாக,கவுரவ பிரச்சினையாக கருதப்பட்டது எப்போதிலிருந்து என்றால், கடந்த தி.மு.க.,ஆட்சியில் திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தபோதிலிருந்துதான். அன்றிலிருந்து இன்று வரை இடைத்தேர்தல் என்றாலே பரபரப்புதான்.

இப்போதும் அப்படித்தான் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏறக்குறைய ஒரு மாத காலம்,தமிழக அமைச்சர்கள், அண்ணா.தி.மு.க., நிர்வாகிகள் எல்லோரும் தன் படைபரிவாரங்களுடன் முற்றுகையிட்டு பணம் என்ற விதையை விதைத்து இந்த வெற்றியை அறுவடை செய்துள்ளார்கள்.

இந்த வெற்றியின் மூலம், பஸ் கட்டணம், பால் விலையேற்றம், மின்வெட்டு போன்ற பிரச்சினைகள் மக்களை பாதிக்காததுபோல் தெரிந்தாலும், பணம் ஒன்றே அத்த்னை பிரச்சினைகளையும் மறைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். கடந்த ஆட்சியில் திருமங்கலத்தில் தி.மு.க. போட்டுக்கொடுத்த பாதையில் இப்போது சங்கரன்கோவிலில் அண்ணா.தி.மு.க.,வெற்றி நடைபோட்டுள்ளது. அதற்காக இந்த ஒரு வருடத்தில் ஜெயலலிதா நல்லாட்சி கொடுத்துள்ளார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆளுங்கட்சி அதிகமாக பணம் கொடுத்துள்ளது என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்ததாக,மக்களின் மன நிலை எப்போதுமே ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். அது, யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் கூட... கடந்த ஆட்சியில் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலுமே ஆளுங்கட்சி கூட்டணியே வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரி....இந்த தேர்தலில் யாருக்கு இழப்பு என்று பார்த்தால் அது தி.மு.க.,விற்கு மட்டுமே.....

கடந்த முறை சுமார் 62000 வாக்குகள் பெற்று  10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த தி.மு.க., இம்முறை 26,220 வாக்குகள் மட்டுமே பெற்று ஏறக்குறைய 35,000 வாக்குகளை இழந்திருக்கிறது. கடந்த முறை அண்ணா.தி.மு.க.பெற்ற 72,000 வாக்குகளை விட இம்முறை 22,000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது.
ம.தி.மு.க.,விற்கென இருக்கும் 21,000 வாக்குகளை அந்தக்கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதைப்போல்தான் தே.மு.தி.க.,வும்.. அந்தக்கட்சி 12,000 வக்குகளை பெற்றிருக்கிறது. அதுதான் அந்தக்கட்சியின் பலமும் கூட.

சங்கரன்கோவில் ஒவ்வொரு தேர்தலின் போதும் அண்ணா.தி.மு.க.,வின் கோட்டை என்று நிருபிக்கப்பட்டாலும்(1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றபோதும் கருப்பசாமி இங்கு வென்றிருந்தார்) இந்த தேர்தலில் சங்கரன்கோவிலில் நல்லாட்சி சான்றிதழ் பெற ஜெயலலிதா சிலவிட்ட தொகைதான் சற்று அதிகம்.Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. எனது நிம்மதி எல்லாம் விடுதலைப்புலிகளின் கைக்கூலி வைக்கோவின் கட்சி அழிந்ததுதான்..

  ReplyDelete
 2. //இந்த தேர்தலில் சங்கரன்கோவிலில் நல்லாட்சி சான்றிதழ் பெற ஜெயலலிதா சிலவிட்ட தொகைதான் சற்று அதிகம்.
  //

  இதுதான் பைனல் டச்

  ReplyDelete
 3. கசாலி,

  தமிழ்நாட்ட பொறுத்த அளவுல இடைத்தேர்தல் வைக்கிறதே வேஸ்ட் தான். பேசாம ஆளும் கட்சிய அந்த தொகுதிய எடுத்துக்க சொல்லிட்டு நீங்களே MLA வ முடிவு பண்ணிக்கங்கன்னு சொல்லிடலாம்.

  தேவையா, ஒரு மாசமா எல்லா அமைச்சர்களும் அங்க போய் இருந்து , அமைச்சக வேலைய பாக்காம. போங்கப்பா.. இனியாவது இடைத்தேர்தல்கலேல்லாம் வைக்காம இருங்க.

  ReplyDelete
 4. கடமைக்கு நடுவுல பதிவு போட்ற உன் ஆர்வத்த பாராட்றேன்.

  ReplyDelete
 5. உண்மை. அருமையான அலசல். இதில் அதிமுக பெருமைப் பட ஒன்றுமில்லை. உருப்படியாய் ஏதாவது செய்தால் சரி. ரொம்ப நாள் பிளாக் பக்கம் வர முடியல சார். வேலைப்பளு அதிகம். இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது. இனி எப்படியோ? அந்த கடவுளுக்கே தெரியும்.

  ReplyDelete
 6. @ சகோ ரஹீம் கஸாலி....
  நல்ல அலசல் ....கடைசி பாரா " பஞ்ச் " சூப்பர் .....

  ReplyDelete
 7. நல்லாவே அலசுறீங்க!

  ReplyDelete
 8. ம.தி.மு.க.,விற்கென இருக்கும் 21,000 வாக்குகளை அந்தக்கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதைப்போல்தான் தே.மு.தி.க.,வும்.. அந்தக்கட்சி 12,000 வக்குகளை பெற்றிருக்கிறது. அதுதான் அந்தக்கட்சியின் பலமும் கூட.//

  ம.தி.மு.க விற்கு அனைத்து தொகுதிகளிலும் 20000 வாக்குகள் கிடையாது. வை.கோ வின் சொந்த தொகுதியாக இருந்தாலும் இரண்டாமிடம் பிடிக்காமல்
  இருப்பது கட்சியின் பலவீனத்தையே காட்டுகிறது. தே.மு.தி.க 2006 தேர்தலை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் தே.மு.தி.க ம.தி.மு.க வை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. ஆகவே இந்த தேர்தல் முடிவை வைத்து ம.தி.மு.க வின் பலத்தைக் கணிப்பது சரி வராது.

  ReplyDelete
 9. ////அப்போதெல்லாம் இடைத்தேர்தல் என்றாலே பரபரப்பில்லாமல், ஒரு ஊராட்சி மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தலைப் போல்தான் நடைபெற்று வந்துள்ளது. ////

  அப்போதெல்லாம் என்றால் எப்போது?

  1986-ல் நடந்த நெல்லை இடைத்தேர்தலில் ஆர்.எம்.வீரப்பன் செய்த செலவுகளைப் பற்றி ஏதாவது தெரியுமா?

  முதன் முதலாக எம்ஜியார் கட்சி வெற்றிவாகை சூடிய திண்டுக்கல் இடைத்தேர்தலில் கருணாநிதி கட்சியினர் செய்த அராஜகம் தெரியுமா?

  எம்ஜியார் ஆட்சி காலத்தில் சென்னை அண்ணாநகரிலும், மாயவரத்திலும் கருணாநிதி கட்சி வென்றது தெரியுமா?

  பழைய பத்திரிக்கை செய்திகளைப் படிக்கவும்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.