என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, February 27, 2013

31 நாங்க அப்பவே அப்படி.......
எனக்கு பத்திரிகைகள் வாசிப்பு பழக்கம் எப்போது வந்தது என்று வந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். நினைவிற்கு வரவே இல்லை. இதிலிருந்து ஒன்று மட்டும் எனக்கு விளங்குகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதற்கு காரணம் என் ஜீனாகக் கூட இருக்கலாம்.

மிக சிறு வயதில் இருந்தே எங்கள் வீட்டில் ஆனந்த விகடனும், குமுதமும் படிக்க கிடைக்கும். என் தந்தை அவர்களும் சிறிய தந்தை அவர்களும் தான் இதற்கு காரணம்.

அவர்கள் தவறாமல் இந்த புத்தகங்களை வாங்குவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை ஒரு ரூபாய்தான் இருக்கும். எப்படி சொல்கிறேன் என்றால் அதன் விலை இந்தியாவில் 100 காசுகள் என்றும் இலங்கையில் அதைவிட சற்று அதிகமாகவும் விலை அச்சிடப்பட்டிருக்கும்.அது என் நினைவில் இன்னும் இருக்கிறது. அவர்களிடமிருந்து எனக்கும் இந்தப்பழக்கம் வந்தது.

ஆரம்பத்தில் சினிமா நடிகர்களின்  புகைப்படம் பார்ப்பதற்காக மட்டுமே இந்த சஞ்சிகைகளை கையில் எடுப்பேன். போகப்போக செய்திகள் ஒவ்வொன்றையும் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். முத்தாரம் என்ற சஞ்சிகையை மூத்தரம் என்று படித்து என் தந்தையால் மண்டையில் குட்டப்பட்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் இப்போது போல எந்த தொடர்கதையும் தொகுத்து புத்தகமாக வராது. ஆகவே என் சிறிய தந்தை அவர்கள் ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றில் வரும் சாவி, இந்துமதி, ராண்டர்கை, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களின் தொடர்களை ஒவ்வொரு வாரமும் கவனமாக வெட்டி எடுத்து வைத்துக்கொண்டு, தொடர் முடிந்ததும் பைண்டிங் செய்து பத்திரப்படுத்துவார். அப்படி பத்திரப்படுத்தப்பட்ட புத்தகங்களில் சில இன்னும் எங்கள் வீட்டில் இருக்கிறது.

விகடன் குழுமத்திலிருந்து வந்த ஜூனியர் விகடனின் முதல் இதழைக்கூட அப்போது நான் படித்திருக்கிறேன். எனக்கான வாசிப்புலக வாசலை இன்னும் விசாலமாக திறந்துவிட்டது எங்கள் ஊர் நூலகம்தான் என்றால் அது மிகையில்லை.நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் பள்ளிக்கு எதிரில்தான் நூலகம் அமைந்திருக்கும். பள்ளி விட்டு எல்லோரும் வீட்டிற்கு போவார்கள். நான் மட்டும் நூலகத்தில் நுழைந்து ஏதாவது படித்துக்கொண்டிருப்பேன். அப்போது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். 1986- ஆம் ஆண்டு.

என்னடா இந்த சின்னப்பையன் நூலகத்திற்கு வந்து படம் பார்க்கிறானே என்று நினைக்காமல் என் படிப்பு ஆர்வத்திற்கு ஊக்கம் கொடுத்தார் அப்போது நூலகராக இருந்த திருப்பதி அய்யா அவர்கள். பின் அவரே நூலகத்தில் என்னை உறுப்பினராகவும் சேர்த்துவிட்டார். அப்போது நூலகத்தில் உறுப்பினராக ரூபாய் இரண்டுதான். ஆனால், அவர் அதைக்கூட என்னிடம் வாங்கவில்லை.

நான் நூலகத்தில் சேர்ந்த பின் நான் வீட்டிற்கு எடுத்துக்கு போய் படித்த முதல் புத்தகம் அம்புலிமாமா. கோகுலம் போன்ற புத்தகங்கள். அதில் வரும் பல கதைகள் அர்த்தம் பொதிந்தவைகளாக இருக்கும். குறிப்பாக அம்புலிமாமாவில் வரும் வேதாளம் விக்ரமாத்தித்தன் கதைகள். அம்புலிமாமாவை பதினைந்து நாள் அவகாசத்தில் எடுத்துக்கு போய் முன்றே நாளில் திருப்பி கொடுத்துவிட்டு வேறு புது அம்புலிமாமா கேட்டேன்.

டே இது மாசத்துக்கு ஒரு தடவை வரும் புத்தகம். உனக்காக வாராவாரமா வரும் என்றார் சிரித்துக்கொண்டே. படிக்கும் பழக்கம் அதிகரித்ததற்கு நூலகமும் பெரும் பங்கு வகித்தது. அதன் பின் அங்கு இருக்கும் நிறைய தெனாலிராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், பீர்பால் கதைகள் என்று எல்லாவற்றையும் படித்தேன். அதன் பின் ராஜேஷ்குமார், தமிழ்வாணன், சுபா. பிகேபி, இந்திரா சவுந்தர்ராஜன், என்டமூரி வீரேந்திரநாத்(தமிழில் அழகாக மொழிபெயர்த்திருப்பார் சுசிலா கனகதுர்கா) என்று எல்லோரும் எனக்கு அறிமுகமானது இந்த நூலகத்தில்தான்.அடுத்ததாக....எங்கள் ஊரில் ஒரு சலூன் இருந்தது அப்போது. கணேஷன் என்பவர் நடத்தினார். 1980- களின் இறுதியில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நானும் என் நண்பன் புகாரியும் தவறாமல் அந்த சலூனுக்கு போய் விடுவோம், அந்த சலூன் திறப்பதற்கு முன்பே.

காரணம், தினமலருடன் வரும் சிறுவர் மலர் தான். சலூனுக்கான பேப்பரை நேராக பேப்பர் கடைக்கே போய் வாங்கி வருவோம். யார் முதலில்  படிப்பது என்று எங்களுக்குள் கடும் போட்டி வரும். இந்த வாரம் நான் படித்தால் அடுத்தவாரம் அவன்(புகாரி) படிப்பான். இப்படித்தான் முறை வைத்து படித்தோம் இருவரும். நாங்கள் படித்து முடிப்பதற்கும் சலூன் திறப்பதற்கும் சரியாக இருக்கும். எங்களை பார்க்கும் சலூன் கணேஷண்ணன் உங்களை பார்த்தாத்தான்டா எனக்கு வெள்ளிக்கிழமைனே ஞாபகம் வருது என்பார். சிறுவர் மலரில் அப்போது வந்த பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண் போன்ற படக்கதைகள் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கும்.

அதைப்போல மாயாவி கதை வரும் ராணி காமிக்ஸ். மாதத்திற்கு இரு முறை வரும் இந்த புத்தகத்தின் விலை இரண்டு ரூபாய்தான். நான் ஒரு ரூபாயும், புகாரி ஒரு ரூபாயும் போட்டு அதை வாங்குவோம். ஒரு முறை நான் முதலில் படித்து விட்டு அவனுக்கு கொடுப்பேன். மறுமுறை அவன் படித்துவிட்டு என்னிடம் கொடுப்பான். இருவர் படித்ததும் இன்னொருவனிடம் ஒரு ரூபாய்க்கு விற்றுவிடுவோம். நான் மலேசியாவில் இருந்த போதும் நான் ஒரு புத்தகம் வாங்குவதும், அவன் ஒரு புத்தகம் வாங்குவதும் தொடர்ந்தது.

இப்படியாக இருந்த வாசிப்பு பழக்கம் சற்று முன்னேறி 1993- ஆம் ஆண்டில் முதன் முதலில் ராணி இதழில் அன்புள்ள அல்லி பகுதியில் என் கேள்வியும் வருமளவிற்கு வந்தது. அதை பார்த்ததும் அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அதன் பின் அடிக்கடி ராணியில் என் பெயர் வந்தது. அதன் பின் 1996-ஆம் ஆண்டில் குமுதம், ஆனந்த விகடன், ஜூ.வி., கல்கி, இந்தியா டுடே, நக்கீரன், பாக்யா, 2000-ஆம் ஆண்டில் வின்நாயகன்(சுஜாதா, மதன் போன்ற பிரபலங்களின் பங்களிப்பில் சில மாதங்கள் மட்டுமே வந்தது) போன்ற பத்திரிகைகளில் ஏதாவது ஒரு வகையில் என் பெயர் வந்து விடும் தவறாமல். இப்படியாக என் வாசிப்பு பழக்கம் விரிவடைந்தது. அதுவே இப்போது சொந்தமாக ஒரு வலைத்தளம் வைத்து எழுதும் அளவிற்கு வந்துள்ளது.

மங்களநாடு பாருக், என் நண்பன் புகாரி, சிராஜ் மற்றும் எங்கள் ஊரில் 1986-ஆம் ஆண்டு நூலகராக இருந்த திருப்பதி ஐயா, பட்டிணக்காடு முத்துக்குமார் ஆகியோர் என்னை இந்த விஷயத்தில் ஏதாவது ஒரு வகையில் தூண்டியவர்கள். குறிப்பாக எங்கள் ஊரில் அமைந்திருக்கும் நூலகம், டீக்கடை, சலூன் போன்ற அஃறினையும் தான். அனைவருக்கும் நன்றி/ அத்தனைக்கும் நன்றி.


Post Comment

இதையும் படிக்கலாமே:


31 comments:

 1. Replies
  1. கமென்ட் டெஸ்ட்டிங்...

   1...

   2........

   3..................

   Delete
 2. இது தான் ரஹீம் கஸாலி உருவான வரலாறு!

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் வச்சிக்கலாம் செங்க்ஸ்.....நீங்கதான் இதை பதிவா போட சொன்னீங்க.....போட்டுட்டேன்.

   Delete
 3. எனக்கும் சின்ன வயதில் இருந்தே படிக்கும் ஆர்வம் அதிகம்... ஆனா நூலகமோ சரியான ஊக்குவிப்போ இருந்ததில்ல...

  நீங்களாம் கொடுத்து வச்சவங்க :-)

  ReplyDelete
 4. அழகான நினைவுகள் கஸாலி...

  உன் அளவு சின்ன வயதில் நான் படித்ததில்லை என்றாலும்.. நம் ஊர் அரசு நூலகத்திற்கு அவ்வப் பொழுது செல்வேன்... அதேன் போல் கனேஷன் அண்ணனின் சலூனில் ஒவ்வொரு வாரமும் வரும் சிறுவர் மலர் படிக்க செல்வேன்....

  கள்ளம் கபடம் இல்லாமல் சுற்றித் திரிந்த அந்த பழைய நியாபங்களை மீழத் தந்தமைக்கு நன்றி...

  இந்த போஸ்ட் போட்டதிற்காக உனக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நானும் புகாரியும் சிறுவர் மலருக்கு சண்டையிட்ட காலத்தில் நீ ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தாய். ஆகவே எங்கள் சண்டையில் உனக்கு பங்கில்லை.

   Delete
  2. // நானும் புகாரியும் சிறுவர் மலருக்கு சண்டையிட்ட காலத்தில் நீ ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தாய். ஆகவே எங்கள் சண்டையில் உனக்கு பங்கில்லை. //

   நான் ஊரில் இருந்து இருந்தாலும் அந்தச் சண்டையில் பங்கு கொண்டு இருக்க மாட்டேன்... ஏன்னா நான் ஒரு அமைதி விரும்பி என்று உனக்கே தெரியும்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

   Delete
 5. பொன்னியின் செல்வன் 5 பாகமும் நீ வாங்கிட்டு வந்த.. ஆனா நீ படிக்கவே இல்லை.. உன் அத்தா முதலில் படிச்சார்.. அவர் ஒவ்வொரு பாகமாக முடிக்க முடிக்க நான் காத்து இருந்து வாங்கிச் சென்று படித்தேன்.. நினைவிருக்கா?? வெறி பிடிச்ச மாதிரி படிச்சேன் அத....

  ReplyDelete
  Replies
  1. 1996-ஆம் ஆண்டுன்னு நினைக்கிறேன். நீ அந்த நாவல் மொத்த பாகத்தையும் ஒரே வாரத்தில் படித்தே...... நான் உன்னை பிரமிப்புடன் பார்த்த நாள் அது.

   Delete
 6. படித்த கதையைப் படித்தேன். மகிந்தேன்.

  ReplyDelete
 7. படித்த கதையைப் படித்தேன். மகிந்தேன்.

  ReplyDelete
 8. படித்த கதையைப் படித்தேன். மகிந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அது சரி. வழக்கமா ஒண்ணுக்கு மேற்பட்ட கமெண்டையே போடறீங்களே. ஏன்னே?

   Delete
 9. சொந்தக் கதை.எழுதத் தூண்டியவரும் வாசிப்பில் மன்னர் தான்!

  ReplyDelete
  Replies
  1. வாசிப்பில் மட்டும் தானா?

   Delete
  2. அதுக்கு மேல..........................ஒங்களுக்குத் தான் தெரியும்,ஹ!ஹ!ஹா!!!!

   Delete
 10. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
  Replies
  1. இணைக்கறேன் நண்பரே.

   Delete
 11. சுவையான நினைவுகள்! அந்தகாலத்தில் குமுதமும் விகடனும் வாசகர்களை உருவாக்கி இருப்பதில் மிகையில்லை! நானும் அப்படித்தான் வளர்ந்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நிறைய பேர் எழுத்துக்கூட்ட ஆரம்பித்ததே விகடனில்தான். வருகைக்கு நன்றி சுரேஷ்.

   Delete
 12. ஹ்ம்... விகடன், சிறுவர்மலர், எல்லாத்தையும் அட்டை டூ அட்டை படித்த காலங்கள்... /பலமுக மன்னன் ஜோ, எக்ஸ்ரே கண்// :))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நீங்கள் மட்டுமல்ல. பலரும் இதை கடந்துதான் வந்திருப்பார்கள்.

   Delete
 13. பசுமையான நினைவுகள் கஸாலி பாய்...முடிந்தால் நீங்களும் சிறுகதைகள்,நகைசுவை கதைகள் எழுதலாம்..உங்களின் வாசிப்பு பழக்கம் உங்களுக்கு கண்டிப்பாக உதவும்..!!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் என் தளத்திற்கு புதியவர் என்று நினைக்கிறேன். நானும் நிறைய கதைகள் எழுதியிருக்கேன்.

   Delete
  2. நீங்கள் என் தளத்திற்கு புதியவர் என்று நினைக்கிறேன். நானும் நிறைய கதைகள் எழுதியிருக்கேன்.

   Delete
 14. “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்“
  என்னும் பழமொழிக்கு நீங்கள் ஓர் உதாரணம்.
  வாழ்த்துக்கள் ரஹீம் பாய்.

  ReplyDelete
 15. இந்த பதிவை படித்ததில் இருந்து மனம் கணத்தபடியே உள்ளது,கடந்த கால நினைவுகளில். அம்புலிமாமா நீதிக்கதை மகாபாரதம், சிறுவர்மலரில் வாலி கதைகள் சுவாரஸ்யமாக இருக்கும். உங்க அனுபவங்களில் நான் சிறுவனான பீலிங்.

  ReplyDelete
 16. ரத்னபாலா (பாலர் வண்ண மாத மலர்),
  மணிப்பாப்பா,
  பூந்தளிர்,
  பாலமித்ரா,
  சம்பக்
  இவைகளெல்லாம் படித்திருக்கிறீர்களா?

  ReplyDelete
 17. ரத்னபாலா (பாலர் வண்ண மாத மலர்),
  இதழில் வந்த என் முதல் கவிதை படித்திருக்கிறீர்களா? சுட்டி இதோ:
  www.nizampakkam.blogspot.in/2009/11/paappaasong.html

  ReplyDelete
 18. செல்ஃபோனிலிருந்து கமெண்ட் போடும்போது நெட்வொர்க் பிரச்னையால் 1க்கு மேற்பட்ட தடவைகள் பப்ளிஷ் ஆகிறது.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.