என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, May 07, 2013

3 சூது கவ்வும்.......தனக்கென சில கொள்கைகளை வகுத்துகொண்டு ஆள் கடத்தல் செய்யும் விஜய் சேதுபதியுடன்

ஆபிஸில் வேலை செய்யும் பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வேலையிழந்த ஒருவன், நயன்தாராவிற்கு கோயில் கட்டியதால் ஊரை விட்டு துரத்தப்பட்ட ஒருஇவன், காலை எட்டுமணிக்கே அலாரம் வைத்து எழுந்து குளித்துவிட்டு குடிப்பவன் என மூன்று இளைஞர்கள் டாஸ்மாக்கில் நடக்கும் சண்டையில் உதவுவதன் மூலம் சேர்கிறார்கள்.


பத்தாயிரத்திற்கும், இருபது ஆயிரத்திற்கும் ஆள் கடத்தும் இவர்களிடம் மந்திரியின் மகனை கடத்தும் அசைன்மென்டை ஒப்படைக்கிறார் ஏற்கனவே மந்திரியால் பழிவாங்கப்பட்ட ஒருவர். அப்படி கடத்தினால் இரண்டு கோடி ரூபாய் தருவதாக சொல்கிறார்.


பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த அசைன்மென்டிற்கு ஒத்துக்கொள்கிறார்கள். மந்திரி மகனையும் கடத்துகிறார்கள். ஆனால் மந்திரி மகன் இவர்களை விட பெரிய டுபாக்கூராக இருக்கிறான். அவனே அவன் அப்பாவிடமிருந்து பணம் பறிக்க ஐடியா கொடுக்கிறான் கிடைக்கும் பணத்தில் ஆளுக்கு பாதி பாதி என்ற நிபந்தனையுடன்.


பணம் கைக்கு வந்ததும் பங்கு பிரிப்பதில் மந்திரி மகனுக்கும், விஜய் சேதுபதியின் குழுவிற்கும் வேனிலேயே தகராறு வருகிறது. வேனும் விபத்துக்குள்ளாகிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மந்திரி மகன் மொத்தப்பணத்துடன் கம்பி நீட்டிவிடுகிறான். பணத்தை இழந்து பழியை சுமந்துகொண்டு திரிகிறார்கள் இவர்கள்.


இதற்கிடையில் இவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒரு சைக்கோ போலிசிடம் ஒப்படைக்கிறார் மந்திரி. அதன் பின் என்ன நடக்கிறது எப்படி அந்த சைக்கோ போலிசிடமிருந்து தப்பிக்கிறார்கள் என்பதுதான் படம். படம் முழுவதும் காமெடி கலாட்டாதான்.


லேசான நரையுடன் கூடிய தாடியுடன் விஜய் சேதுபதி. ஆள் கடத்தும் போதும், தனக்கான கிட்நாப் பாலிசியை பாடமாக எடுக்கும் போதும், பேங்க் மேனேஜர் மகளை கடத்திவிட்டு, பேங்க் மேனேஜரின் அறைக்கே போய் பிணைத்தொகையை வாங்கும் போதும் தியேட்டரில் மாஸ் ஹீரோவுக்கு நிகராக கைதட்டலும் விசிலும் பறக்கிறது. குறும்பட இயக்குநர்களின் செல்லப்பிள்ளையாகிவிட்டார் விஜய் சேதுபதி.ஆனாலும் முற்பாதியில் அவர்கூடவே பயணிக்கும் கற்பனை பாத்திரமான சஞ்சிதா ஷெட்டி இந்தப்படத்திற்கு ஏன் என்று தெரியவில்லை. விஜய் சேதுபதிக்கு ஏன் லேசான மனப்பிறழ்வு நோய் என்றும், சஞ்சிதா ஷெட்டியின் பின்னணி என்ன என்பதையும் இயக்குனர் சற்று விளக்கியிருக்கலாம்.காமராஜர் காலத்து கக்கன் போல மிக நேர்மையான மந்திரியாக எம்.எஸ்.பாஸ்கர், முதல்வராக ராதாரவி என்று எல்லோரும் பாத்திரத்துக்குள் கச்சென்று பொருந்திப்போகிறார்கள்.

சின்ன சின்ன ட்விஸ்டுகள் படம் முழுக்க வியாபித்திருந்தாலும் அந்த ஹெலிகாப்டர் ஐடியா செம. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நான் ஸ்டாப் காமெடியில் அதையெல்லாம் மறந்துவிடுவது நலம். பாடல்கள் பெரிதாய் இல்லாவிட்டாலும் உறுத்தல் இல்லாமல் படத்தோடு சேர்ந்து வருவதால் பிரச்சினையில்லை.


நாளைய இயக்குநர் பட்டறையிலிருந்து வந்தவராம் இயக்குநர் நலன் குமரசாமி. இவரின் சகாவான கார்த்திக் சுப்புராஜ் பீட்சாவில் திகில் காட்டினார் என்றால், இவரோ சிரிப்பு காட்டியிருக்கிறார். ஆனாலும் இருவருமே ஒரு அழுத்தமான இடத்தை பிடித்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில்.

முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் குறைவுதான். இருந்தாலும்  கவ்வியது சூதை மட்டுமல்ல........சிரித்து சிரித்து வயிற்றையும்தான். 


Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

 1. வணக்கம் தல...

  நானும் இன்று காலை காட்சி பார்த்தேன்...

  நல்லது...

  ReplyDelete
 2. நிச்சயம் பார்க்கவேண்டிய படமாக்த்தான்
  விமர்சனத்தைப் படிக்கையில் புரிகிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.