என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, December 24, 2013

7 என்னது...எம்.ஜி.ஆர். செத்துட்டாரா?ப்போது எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு நாள் காலை வழக்கம்போல் தண்ணீர் பிடிக்க குழாயடிக்கு போன என் அம்மாவோடு நானும் போயிருந்தேன். அங்கே ஒரே பரபரப்பு...
கூடியிருந்த பெண்களெல்லாம்.....

”எம்.ஜி.ஆரு செத்துப்போயிட்டாராம்” என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

”என்னது...எம்.ஜி.ஆர். செத்துட்டாரா? நீ வேற அவரு செத்துருக்கமாட்டாரு இது அந்த சூரிய கச்சி கருணாநிதியோட பொய்யா இருக்கும்”-என்று ஜெயலலிதாவின் ஜெராக்ஸ் போலவே பேசினார் ஒரு பெண்மணி.

இன்னொரு பெண்ணோ...”எம்.ஜி.ஆரெல்லாம் சாகற ஆளா?...அவரு சாகல...உயிரோடதான் இருக்காரு-ன்னு சொன்னார். 

”போடி போக்கத்தவளே....காலையில ரேடியாக்காரன் சொன்னான். பொய்யா சொல்லிருக்கப்போறான்”. 
மெல்ல மெல்ல விஷயம் காட்டித்தீ போல பரவியது. 
எனக்கும் எம்.ஜி.ஆரை தெரியும். எப்படி தெரியுமா எனக்கு எம்.ஜி.ஆர்., அறிமுகமானார்?

1984-ஆம் ஆண்டில் எங்கள் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசு (இப்போது திருநாவுக்கரசர்) போட்டியிட்டபோது, எங்கள் ஊருக்கு திற்ந்தவெளி ஜீப்பில் பிரச்சாரத்துக்கு வந்தார். அதில் எம்.ஜி.ஆர்.,படம் ஒட்டியிருக்கும். எனக்கு அப்போது தெரியாது இவர்தான் எம்.ஜி.ஆர்.என்று. அந்த எம்.ஜி.ஆர்., படத்தை காட்டி இது யாரு என்று தெரியாமல் ஒருவரிடம் கேட்டு தொலைந்துவிட்டேன்.
உடனே அவரு கோபமாகி "இவரைத்தெரியாதா?  இவருதான் எம்.ஜி.ஆரு.... நீ எல்லாம் என்னத்தை படிச்சியோ?"-என்றார்.
நான் என்னவோ அந்த ஏழு வயசில் கலக்டருக்கு படிச்சிட்டதா நினைச்சிருப்பார் போல...
"அண்ணே இவரா எம்.ஜி.ஆரு?....படம்லாம் நடிப்பாரே அவரா இவரு?....என்ன இப்படி கண்ணாடி தொப்பிலாம் போட்டிருக்காரு?... படத்துல இப்படி இருக்கமாட்டாரே?"-என்று கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தேன். (நிஜம்தான் எம்.ஜி.ஆர்., ஒரு ஹீரோவாக, மிகவும் அழகாக, தொப்பி கண்ணாடி இல்லாதவராகவே சினிமாவில் பார்த்திருந்ததால் எனக்கு அவரின் பிம்பம் அப்படித்தான் நினைவில் இருந்தது)

"அடே...அது சினிமாவுலடா... இப்ப அவரு இப்படித்தான் இருப்பாரு"-என்று சொன்னார் அந்த அண்ணன். 
இருந்தாலும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. அரசியல்வாதி எம்.ஜி.ஆர்.,வேறு....சினிமா நடிகர் எம்.ஜி.ஆர் வேறு என்றே நினைத்திருந்தேன். வீட்டிற்கு வந்ததும் என் சட்டை பையில் இருந்த தொப்பி,கண்ணாடி அணிந்த எம்.ஜி.ஆர்., படத்தை எடுத்து, வீட்டில் இருந்த ஏதோ ஒரு (படத்தில் பெயர் நினைவில் இல்லை) எம்.ஜி.ஆர்., பட போஸ்டரை .  (தினத்தந்தி கடைசி பக்கத்தில் வரும் ஸ்டாம்ப் சைஸ் பேப்பர் கட்டிங்க்) எடுத்து வைத்து ஒப்பிட்டு பார்த்தேன். லேசாக வித்தியாசம் தெரிந்தது. இருந்தாலும் திருப்தி இல்லை.

அரசியல்வாதி எம்.ஜி.ஆருக்கு என் பென்சிலை எடுத்து மீசை வைத்துப்பார்த்தேன். தொப்பியையும் கையை வைத்து மறைத்துவிட்டேன். லேசாக புலப்பட்டது...அந்த அண்ணன் சொன்னது சரிதான். அவருதான் இவரு...இவருதான் அவரு....என்ன கதை திசை திரும்பிருச்சோ?

சரி ஃபிளாஷ்பேக் முடிந்தது... இனி....எம்.ஜி.ஆர். மரணத்திற்கு போகலாம்...
எம்.ஜி.ஆரின் மறைவு செய்தி எல்லோருக்கும் எட்டியது. ரேடியோவை திறந்தால்... ஏதேதோ வாத்தியங்களை உருட்டி சோக கீதம் வாசித்தபடியே இருந்தார்கள். அப்போது இருந்த ஒரே சேனலான தூர்தர்சனிலும் இதேதான். எம்.ஜி.ஆர்., மரணத்தை நேரடியாக ஒளிபரப்பினார்கள்.

அப்போதெல்லாம் தெருவுக்கு இரண்டு சாலிடர், அல்லது டயனோரா டி.வி.தான் இருக்கும். தெளிவாக தெரிய ஒரு பூஸ்டரும் வைத்திருப்பார்கள். டி.வி.இருந்த வீடெல்லாம் ஒரே மக்கள் வெள்ளம். நானும் உட்கார்ந்து பார்த்தேன். எம்.ஜி.ஆரின் தலையருகே ஜெயலலிதா சோகமாக உட்கார்ந்திருந்தார். அப்போது எனக்கு தெரிந்ததெல்லாம் எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ராஜீவ்காந்தி, திருநாவுக்கரசு ஆகிய அரசியல் தலை(வர்)கள் தான். அதிலும் திருநாவுக்கரசு  எங்கள் தொகுதி எம்.எல்.ஏ,வாகவும் அமைச்சராகவும் இருந்தவர் என்பதால்தான் அவரையும் தெரியும்.

அவர்களில் அனைவரும் எம்.ஜி.ஆர்., மரணத்தின்போது வந்திருந்தார்கள். இடையிடையே ரஜினி, கமல், சிவாஜி, சத்தியராஜ் என்று சினிமா பிரபலமும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஹையா..ரஜினி...ஹையா கமல் என்று என்னைப்போன்று சிறுவர்கள் மத்தியில் ஒரே ஆராவாரம். இந்த ஆராவாரம் யாரையோ எரிச்சல் அடைய செய்தது போல...என் தலையில் ஒரு குட்டு...யாரென்று பார்த்தால் யார் வீட்டில் டி.வி.,பார்த்துக்கொண்டிருக்கிறோமோ அந்த வீட்டின் உரிமையாளர்...
”என்னடா சத்தம் போடுறே....எந்திரிச்சு போடா...என்னமோ இவனுக்கு அரசியல் தெரிஞ்சதுபோல பார்த்துக்கு இருக்கான்”-என்று சொல்லி இல்லை..இல்லை திட்டி வெளியே அனுப்பிவிட்டார். அவமானத்துடனும், ஆற்றாமையுடனும் வெளியே வந்தேன்.
டி.வி.,பார்க்கமுடியாமல் வெளியேறிய நான் அப்படியே கடைத்தெருவிற்கு வந்தேன். அங்கே ஒரு கரண்ட் கம்பத்தில் போட்டோவாக சாய்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு பூ மாலையுடன். திரும்பவும் வீட்டிற்கு வந்தேன். மதியத்திற்கு மேல் மீண்டும் கடைத்தெருவிற்கு சென்றேன். ஒரு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தின் ஆரம்பத்தில் ஒருவர் எம்.ஜி.ஆர்.,படத்தை கையில் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தார். மொத்தக்கூட்டமும் அவர் பின்னால் சென்றது. எதற்கு இப்படி என்று புரியவில்லை எனக்கு...
கூட்டத்தில் வந்த ஒருவரிடம் கேட்டேன்.....

”அண்ணே...எதுக்குண்ணே இப்படி போறீங்க?”

”இன்னைக்கு எம்.ஜி.ஆர்.,செத்துப்போயிட்டாருல்ல அதான் அமைதி ஊர்வலம் போறோம்”-என்றார்.

இப்போது நான் தெளிந்திருந்தேன் நடிகர் எம்.ஜி.ஆரும், அரசியல்வாதி எம்.ஜி.ஆரும் ஒருவர்தான் என்று.....

மீள் பதிவுPost Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. தெளிஞ்சா சரிதான். என் பாட்டிக்கு தான் சாகும்வரை எம்ஜிஆர் செத்துட்டதா நம்பலை.

  ReplyDelete

 2. எம்ஜிஆரைப் பற்றிய உங்களது நினைவலைகள்! ஒரு வித்தியாசமான நினைவஞ்சலி1

  ReplyDelete
 3. நல்லதொரு பதிவு உங்கள் எம்.ஜி.ஆரைப் பற்றிய உங்கள் அனுபவத்தைப் பற்றி! அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிரார் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.!!!அந்த அளவிற்கு எல்லார் மனதிலும் சிம்மாசனம் போட்டு இதயக்கனியாக உட்கார்ந்திருக்கிறார்!

  ReplyDelete
 4. //அரசியல்வாதி எம்.ஜி.ஆருக்கு என் பென்சிலை எடுத்து மீசை வைத்துப்பார்த்தேன். தொப்பியையும் கையை வைத்து மறைத்துவிட்டேன். லேசாக புலப்பட்டது...//

  நீரு ஒரு சைன்டிஸ்ட்டுய்யா!

  ReplyDelete
 5. இந்த கட்டுரையை படித்ததும் எம்.ஜி.ஆர் இறந்த சமயம் எனது கிராமத்தில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன! அதை ஒருபதிவாக்கலாம்! பிறகு எழுதுகிறேன்! நன்றி!

  ReplyDelete
 6. //ஒருவர் எம். ஜி. ஆர். படத்தை//

  நடிகர் எம். ஜி. ஆர். படத்தையா?
  அரசியல்வாதி எம். ஜி. ஆர். படத்தையா?

  ReplyDelete
 7. அவர் உடல் நிலை சரியிலாமல் இருந்தப்ப எங்க தெருவே இறைவா உன் மாளிகையில் பாடல் ஒலித்தபடி இருக்கும்.நான்கூட நம்ம சொந்தகார தாத்தாவோன்னு கன்பியுஸ் ஆய்ட்டேன்.அவர் இறந்தப்ப எங்க தெருவில் பல பேர் துக்கவீட்டில் சமைக்ககூடாதுன்னு ,அடுப்பே பத்தவைக்கமா இருந்தாங்க !அட அவர் செத்துட்டாரா என்ன ?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.